Friday 28 August 2009

மூவாயிரம் பட்டங்களை பறக்கவிட்டு 'காஸா' சிறுவர்கள் கின்னஸ் சாதனை !



ஒரே சந்தர்ப்பத்தில் மூவாயிரம் பட்டங்களை வானத்தில் பறக்கவிட்டு சிறுவர்கள் கின்னஸ் சாதனையொன்றை ஏற்படுத்தியுள்ளனர். எங்கு தெரியுமா? பலஸ்தீனத்தின் எல்லைப் பகுதியான காஸாவில் வசித்து வருகின்ற 6,000 பிள்ளைகள் ஒன்று சேர்ந்தே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் சிறுவருக்கான பிரிவினராலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.6,000 சிறுவர்கள் காஸா எல்லையில் உள்ள கடற்கரையில் கூடி 3,000 பட்டங்களை பறக்கவிட்டு சாதனை படைத்து உள்ளனர். இச் சாதனை முன்னர் வடக்கு ஜெர்மனியின் வசம் இருந்தது. 2007 ம் ஆண்டில் 710 பட்டங்களை பறக்கவிட்டே வடக்கு ஜெர்மனி கின்னஸ் சாதனையை நிகழ்த்தி இருந்தது. அந்த சாதனையையே காஸா சிறுவர்கள் முறியடித்துள்ளனர். இஸ்ரேலியர்களின் தாக்குதலுக்குள்ளாகி வரும் இப்பகுதியில் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமையால் கின்னஸ் கண்காணிப்பாளர்கள் இதனை நேரில் வந்து பார்வையிடவில்லை. எனினும் இதனை ஒரு சாதனையாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

Thursday 27 August 2009

பொது அறிவு


உலகில் மிகப்பெரிய விலங்கு எது ?
திமிங்கிலம்
உலகில் உயரமான விலங்கு எது ?
ஒட்டகச்சிவிங்கி
உலகிலேயே மிக உயரமான மலை எது ?
இமயமலை
உலகிலேயே மிக நீளமான நதி எது ?
அமேசன்
உலகிலேயே மிக ஆழமான ஆழி எது ?
மரியானா ஆழி
உலகிலே அதிக அளவில் எரிமலைகள் உள்ள நாடு எது ?
இந்தோனேஷியா
உலகிலே மிக ஆழமான ஏரி எது ?
பைகால் ஏரி
உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது ?
அவுஸ்திரேலியா
கடல் மட்டத்துக்கு கீழே அமைந்த நாடு எது ?
நெதர்லாந்து
ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது ?
பிலிப்பைன்ஸ்

Tuesday 25 August 2009

இலங்கை தமிழ் வலைபதிவர்களின் சந்திப்பில் அப்படி என்னதான் நடந்தது ?


புளோகருக்கு பத்து வயது எனக்கு பதினோரு வயது .


ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி வெள்ளவத்தை தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்தில் இலங்கை வலைபதிவர்கள் ஒன்றுகூடல் நடைபெற்றது. இதுவே இலங்கை முதல் வலைப்பதிவர் சந்திப்பாகும் . திட்டமிட்ட படி மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் சிறப்பாகவும் காலை 9:15 மணிக்கு இந்த ஒன்றுகூடல் தொடங்கியது. இந்த ஒன்றுகூடலில் நானும் கலந்து கொண்டேன்.


அங்கு Blogger இன் 10வது பிறந்தநாள் கேக்கை 10 பேரைக்கொண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றி கேக்கை வெட்டி கொண்டாடினார்கள். அங்கு வந்திருந்த பதிவர்கள் அனைவரும் தன்னை ஏனைய பதிவர்களுக்கு அறிமுகம் செய்தனர் .






அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு எழில்வேந்தன் ஐயா அவர்கள் பல புதிய விளக்கங்களை தந்தார். பின்னர் மருதவூரான் அண்ணா திரட்டிகள் பற்றி அருமையாக விளக்கினார். அதன் பின்னர் லோசன் அண்ணா தனது பதிவுலக அனுபவங்கள் பற்றி அருமையாக சொன்னார்.






அங்கு வந்திருந்த அனைத்து பதிவர்களை விட நான் தான் வயது குறைந்தவன். இந்த ஒன்றுகூடலில் 80 வலைபதிவர்கள் கலந்து கொண்டனர் . இந்த ஒன்றுகூடல் நேரடியாக www.livestream.com/ என்ற இணையதளத்தில் ஒளிபரப்பாகியது. இந்த ஒன்றுகூடல் 12 : 45 மணியளவில் இனிதே நிறைவடைந்தது .

Thursday 13 August 2009

நயவஞ்சக நரி


She's a Fox...:O)) by law_keven.



ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது.

மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி.

அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன.

“நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?'' என்று கேட்டது ஆண் கழுகு.

“கழுகாரா... வாங்க... கூட யாரு? மன்னியா?'' என்று கேட்டது.


“ஆமாம்!'' “நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!'' என்று கேட்டது.

“ஆமாம்...! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்...! ஏன் கேட்கிறீர்?'' என்று கேட்டது நரி.

“என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!'' என்றது ஆண் கழுகு.

“ரொம்ப ராசியான மரம் இது... முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!'' என்றது நரி.

“ஆபத்து ஏதாவது உண்டாகுமா?'' என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு.

“நான் வயதானவன் இந்த பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்!'' என்றது நரி.

பிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்!'' என்றது.

ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, “என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை... இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்... கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!'' என்றது.

“கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் அண்டாது!'' என்றது நரி.

நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேட பறந்து சென்றது ஆண் கழுகு.

பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவை சுமாராக பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டது.

பன்றிக் குட்டிகளை சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்... பேஷ் பேஷ்...

“நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா?'' என்று கேட்டது அம்மா பன்றி.

“பேஷாக தங்கலாம்!'' என்றது நரி.

“எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே?'' என்று கவலையோடு கேட்டது அம்மா பன்றி.

“நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே... கவலையே படாதே...! நான் வயதானவன். இந்த பொந்தே கதி என்று கிடப்பவன்...! எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்...! நானிருக்க பயமேன்?'' என்றது நரி.

பன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் "கர், கர்' என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன.

வந்ததற்கு இப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படி சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது.

“இதோ பாருங்கள்...! மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்... உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது!'' என்றது.

இரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன.

மேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி.

“பன்றியே...! நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன!'' என்றது நரி.

பன்றி ஒரேயடியாக பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளை தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது.

கழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை கண் போல வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன் பிரகாரமே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி.

ஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின.

நரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன.

யார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்கும், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா, நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்.


Monday 10 August 2009

தெனாலியின் விளக்கம்


கிருஷ்ணதேவராயருக்கு ஒரு நாள் மிகவும் வருத்தமாக இருந்தது. "நாம் மக்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களுக்கு அந்த பணம் ஏன் போய்ச் சேருவதில்லை?' என்பதுதான் அந்த வருத்தம். இதன் காரணம் என்ன என்பது புரியாமல் தவித்தார் மன்னர். தன்னுடைய சந்தேகத்தை தெனாலிராமனிடம் கேட்டார் மன்னர். ""ராமா! இதற்கு என்ன காரணம்? உனக்கு தெரியுமா?'' ""அரசே! இதனை நான் ஒரு நாடகம் போல் விளக்க விரும்புகிறேன். எனக்கு உடனே பனிக்கட்டி ஒன்றை கொண்டு வந்து தரச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மை புரியும்,'' என்றான். அரசர் உடனே பனித்துண்டு ஒன்றை கொண்டு வர ஏற்பாடுச் செய்தார். பனிக்கட்டியும் வந்தது. அதனை வாங்கின தெனாலிராமன் மன்னரிடம், ""அரசே! நீங்கள் இந்த பனிக்கட்டியை நிதி அமைச்சரிடம் கொடுங்கள். பின் அவர் அவரது உதவியாளரிடம் கொடுக்கட்டும். அதன் பிறகு பனிகட்டி அலுவலர்களிடம் போய்ச் சேரட்டும். அப்பொழுது உங்களுக்கு விஷயம் புரியும்,'' என்றான் தெனாலிராமன். பனிக்கட்டி கிட்டத்தட்ட 15 அலுவலர்களை தாண்டி கடைசியில் கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று சேர்ந்தது. அப்பொழுது அவர் கையில் பனிக்கட்டி இல்லை. சிறிது நீர் தான் இருந்தது. பனிக்கட்டி உருகி அப்படி ஆகிவிட்டது. இப்பொழுது ராமன் சொன்னான்: ""புரிந்ததா! மன்னா இதுதான் காரணம். பணம் இவ்வளவு பேரையும் தாண்டி கடைசி அலுவலரிடம் செல்லும் பொழுது கரைந்து விடுகிறது. ""இதுதான் ஏழை மக்கள் படும் கஷ்டங்களுக்கு காரணம்,'' என்றான். மன்னன் புரிந்து கொண்டு நிர்வாகத்தை சீர்படுத்த முனைந்தார்.

நன்றி - சிவா

Sunday 9 August 2009

குரங்குக்குக் கிடைத்த தண்டனை!



ஓர் அடர்ந்த காட்டின் நடுவில் மிகப்பெரிய அரசமரம் ஒன்று இருந்தது. அதில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.
பொழுது விடிவதற்கு முன்பாகவே அவைகள் தங்கள் கூட்டை விட்டு இரை தேடுவதற்காக பறந்து சென்று விடும். தனது குஞ்சுகளுக்கு இரைத் தேடி மாலை நேரத்தில்தான் கூட்டிற்கு வந்து சேரும். அவைகள் கட்டியக் கூட்டில் முட்டைகள், குஞ்சுகள் போன்றவற்றை விட்டுச் சென்று விடுவதால், தாய்-தந்தை இரை தேடிக் கொண்டு திரும்பும் வரை குஞ்சுகள் தனியாகக் கூட்டுக்குள்ளேயே காத்துக் கொண்டிருக்கும்.
அம்மரத்தில் வசித்து வந்த பறவைகளுக்கு சில நாட்களாக பொல்லாத குரங்கு ஒன்று தொல்லைக் கொடுத்து வந்தது. பெற்றோர் இரை தேட வெளியே கிளம்பியதும், அந்தக் குரங்கு அப்பறவைகள் கட்டிய கூடுகளைப் பிரித்து எரிந்து, அதில் இருக்கும் முட்டைகளைக் கீழே போட்டு உடைத்து, குஞ்சுகளைக் கொன்று விடும். இப்படி அக்குரங்கு செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமானது. அந்தக் குரங்கைக் கண்டு மற்ற பறவைகள் அனைத்தும் பயந்து நடுங்கின. குரங்கை எதிர்க்க ஒரு பறவைக்குக் கூட துணிச்சல் வரவில்லை. இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அக்குரங்கு, மரக்கிளையில் ஊஞ்சலாடியபடி, கவலையின்றி தனது வாழ்நாளைக் கழித்தது. மேலும், தனக்கு விதவிதமான உணவுப் பொருள்களைக் கொண்டு வந்து தரும் படியும் பறவைகளை மிரட்டி வந்தது. குரங்கு கூறியபடி பறவைகளும் தங்களது சிறிய அலகுகளால் தானியங்களைக் கொண்டு வந்து தந்தன.
குரங்கு ஒரு நாள், ஒரு பறவையைக் கூப்பிட்டு, பெரிய பை ஒன்றை அதனிடம் கொடுத்து, மாலைக்குள் அந்தப் பை நிறைய தானியங்களைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டது. பாவம் அந்தப் பறவை என்ன செய்யும்? அதனால் பை நிறைய எப்படி தானியம் சேகரிக்க முடியும்; அப்படியே சேகரித்தாலும் அதை எப்படித் தூக்கி வர முடியும்? ஆனால், இதைப் பற்றியெல்லாம் குரங்கு கவலைப் படவில்லை.
பாவம்! அந்தப் பறவை காலையிலேயே தனது கூட்டை விட்டு வெளியே கிளம்பியது. பகல் முழுவதும் அலைந்து திரிந்து மாலைக்குள் எப்படியோ பை நிறைய தானியத்தை சேகரித்துவிட்டது. ஆனால், அந்தப் பையைத் தூக்க அதனால் முடியவில்லை. எனினும், குரங்கு தன்னை ஏதாவது செய்துவிடுமோ என்று பயந்து, தனது சிறிய அலகால் அந்தப் பையை இழுத்துக் கொண்டு வந்து குரங்கிடம் சேர்த்தது.
குரங்கைப் பார்த்து, ""குரங்கு மாமா! இன்று நான் என் குழந்தைகளுக்கு எந்தத் தானியமும் தேடவில்லை. அதனால் இந்தப் பையில் உள்ள தானியத்தில் சிறிது தந்தால், எனது குஞ்சுகளின் பசியைப் போக்குவேன்'' என்று கூறியது.
அதைக் கேட்ட குரங்கு, ""உன் குஞ்சுகளின் பசிக்கு நான் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? இந்தப் பையில் இருந்து நீ எதையும் எடுத்துச் செல்லக் கூடாது'' என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது. இதனால் மிகுந்த வருத்தமடைந்த பறவை, தன் கூட்டை நோக்கிப் பறந்து சென்றது.
மறுநாள், ஒரு கிளியைக் கூப்பிட்டு இதுபோலவே, தானியம் கொண்டு வருமாறு கஷ்டப்படுத்தியது குரங்கு. அந்தக் கிளி காட்டைவிட்டு வெகுதூரத்தில் இருந்த ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கு ஒரு வீட்டில் கிடைத்த சப்பாத்தித் துண்டுகளைக் கொண்டுவந்து தந்தது.
அந்த மரத்தில் வாழும் எல்லாப் பறவைகளுமே அந்தக் குரங்குக்காக ஏதாவது கொண்டு வந்து தரும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டன. இதனால் குரங்கு நிம்மதியாக இருந்த இடத்தில் இருந்து கொண்டு சாப்பிட்டு நிம்மதியாகத் தூங்கியது. குரங்கின் செயலை நினைத்து அனைத்துப் பறவைகளும் மிகவும் எரிச்சலடைந்தன.
ஒரு நாள், குரங்கால் பாதிக்கப்பட்ட கிளி, புறா, மைனா, மரங்கொத்தி போன்ற பறவைகள், பெüர்ணமி நாளன்று ஓர் இடத்தில் கூடி இதுபற்றி ஆலோசித்தன. அதன்படி, இந்த மரத்தை விட்டு நாம் அனைவரும் வேறு இடத்திற்குச் சென்று கூடு கட்டி வாழலாம்; அல்லது அந்தக் குரங்கை இந்த மரத்தை விட்டு விரட்டி விடலாம் என்பது போல பல யோசனைகள் செய்தன. அந்தப் பறவைக் கூட்டத்தில் வயதான பருந்தும் இருந்தது.
அது கூறியது, ""பிள்ளைகளே! நம்மை இப்படி தானியம் கொண்டுவரக் கட்டாயப்படுத்தும் குரங்கை அடிக்க ஒரு வழிதான் உள்ளது'' என்றது.
உடனே ஆந்தை, ""என்ன வழி உள்ளது தாத்தா? உடனே சொல்லுங்களேன்'' என்றது. அதைக் கேட்ட பருந்து,""இந்தக் காட்டில் விசித்திர மரம் ஒன்று உள்ளது. அதைப்பற்றி இதுவரை யாருக்கும் தெரியாது. அந்த மரத்தில் ஏதாவது ஒரு பகுதியை வெட்டினால் அதிலிருந்து ஒரு பொருள் வெளிவரும். அது உடம்பில் பட்டால் ஒட்டிக் கொள்ளும். பிறகு, அதைப் பிரித்து எடுக்கவே முடியாது. அதை எப்படியாவது நீங்கள் எடுத்து வந்து குரங்கின் மீது போட்டுவிட்டால் போதும். ஆனால், ஒரு விஷயத்தில் கவனமாக இருங்கள். அதைக் கைகளில் படாமல் எடுக்க வேண்டும். உடம்பில் சிறிது பட்டாலும் புண்ணாகிவிடும்'' என்றது.
பருந்து கூறியபடி, சில பறவைகள் அந்த மரம் இருக்கும் இடத்திற்குச் சென்று, தங்களது உடம்பில் படாதபடி நீண்ட குச்சி ஒன்றில் அந்த மரத்தில் இருந்து வடிந்த திரவம் போன்ற அந்தப் பொருளை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த குரங்கின் உடம்பில் பல இடங்களில் தடவி விட்டன.
மறுநாள் காலை எழுந்ததும், குரங்கு தனது உடம்பில் ஒட்டி இருந்த அந்தத் திரவத்தை எடுக்க முயன்றது. அது நன்றாக ஒட்டிக் கொண்டதால் பிரித்து எடுக்க முடியவில்லை. உடலில் பல இடங்களில் புண்ணாகிப் போய் அதிலிருந்து ரத்தம் வடியத் துவங்கியது. இதைப் பார்த்து குரங்கு மிகவும் பயந்து போனது. வலியால் அங்கும் இங்கும் தாவி அழுது புரண்டது. இப்படியே சில நாட்கள் கழிந்தன. இப்போதெல்லாம் குரங்கு பறவைகளிடம் தானியங்களைக் கொண்டு வந்து தரும்படி மிரட்டுவதில்லை. மிகுந்த கவலையால் கத்திக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பறவைகள் இரக்கப்பட்டன.
குரங்கு, தனக்கு உதவி செய்யும்படி பறவைகளை வேண்டியது. தான் செய்த தீய செயல்களுக்காக மன்னிப்பும் கேட்டது. இதைக் கேட்ட பறவைகள், எப்படியாவது குரங்கின் துன்பத்தைத் தீர்க்க வேண்டும் என முடிவு செய்தன. அதன்படி ஒரு நாள், பருந்து தாத்தாவைத் தேடி மற்ற பறவைகள் சென்று, ""பருந்துத் தாத்தா! பாவம் குரங்கு. தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தி விட்டது. அதனால், அதன் உடம்பில் ஏற்பட்ட காயத்தைப் போக்க ஏதாவது மருந்து இருக்கிறதா? அப்படி இருந்தால் கூறுங்களேன். பாவம் குரங்கு துன்பப்படுவதை எங்களால் பார்க்க முடியவில்லை'' என்றன.
சிறிது நேரம் பேசாமல் இருந்த பருந்து, ""நீங்கள் இப்படி கூறியதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எந்த மரத்தில் இருந்து அந்தத் திரவத்தை எடுத்தீர்களோ, அதே மரத்தின் இலைகளைப் பறித்து வந்து, சாறு எடுத்து குரங்கின் உடம்பில் உள்ள காயத்தில் தடவுங்கள். இரண்டு நாட்களிலேயே காயம் ஆறி விடும்'' என்றது.
பருந்து கூறியது போலவே, அந்த மரத்தின் இலைகளைப் பறித்து சாறு எடுத்து குரங்கின் காயத்தில் தடவின. குரங்குக்கு சில நாட்களிலேயே காயம் குணமாகிவிட்டது. மேலும், அது எல்லாப் பறவைகளிடமும் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்து கொண்டது. கெட்ட செயல்களுக்கு கண்டிப்பாகத் தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டது. இதனால் மற்ற பறவைகள் அனைத்தும் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்தன.

நன்றி தினமணி! smile.gif

Wednesday 5 August 2009

சிறுவர்களுக்கு கிட்மெயில்


சிறுவருக்கென ஒரு ஈமெயில் வந்துள்ளது .


Parents - Try KidMail.net!
Fun, Safe E-Mail - No Spam or Porn.
Your Family will Love KidMail.