மாயமான விமானத்தின் தடயம் ஏதும் கிடைக்கவில்லை என மலேசிய விமான போக்குவரத்துத் துறை தலைவர் தாடுக் அசாருதீன் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

மாயமான மலேசிய விமானத்தின் நொறுங்கிய பாகங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும், செயற்கோள் உதவியுடன் எடுக்கப்பட்ட சில பொருட்களின் புகைப்படங்களை சீனா வெளியிட்டது.சீன செயற்கோள் புகைப்படங்களில் குறிப்பிட்ட தென் சீன கடல் பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டதாகவும், ஆனால் அப்பகுதிகளில் சீனா குறிப்பிட்டது போல் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சனிக் கிழமை அதிகாலை 12.41 மணிக்கு 239 பேருடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது.

அதில் 152 சீனர்கள், 5 இந்தியர்கள் உள்பட 14 நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகளும் விமானி உள்பட 12 ஊழியர்களும் இருந்தனர். வியட்நாம் எல்லையில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து திடீரென மறைந்தது.கடந்த 4 நாள்களாக பத்து நாடுகள் கூட்டாக சேர்ந்து விமானத்தை தேடியும் இது வரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.