
ஒரே சந்தர்ப்பத்தில் மூவாயிரம் பட்டங்களை வானத்தில் பறக்கவிட்டு சிறுவர்கள் கின்னஸ் சாதனையொன்றை ஏற்படுத்தியுள்ளனர். எங்கு தெரியுமா? பலஸ்தீனத்தின் எல்லைப் பகுதியான காஸாவில் வசித்து வருகின்ற 6,000 பிள்ளைகள் ஒன்று சேர்ந்தே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் சிறுவருக்கான பிரிவினராலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.6,000 சிறுவர்கள் காஸா எல்லையில் உள்ள கடற்கரையில் கூடி 3,000 பட்டங்களை பறக்கவிட்டு சாதனை படைத்து உள்ளனர். இச் சாதனை முன்னர் வடக்கு ஜெர்மனியின் வசம் இருந்தது. 2007 ம் ஆண்டில் 710 பட்டங்களை பறக்கவிட்டே வடக்கு ஜெர்மனி கின்னஸ் சாதனையை நிகழ்த்தி இருந்தது. அந்த சாதனையையே காஸா சிறுவர்கள் முறியடித்துள்ளனர். இஸ்ரேலியர்களின் தாக்குதலுக்குள்ளாகி வரும் இப்பகுதியில் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமையால் கின்னஸ் கண்காணிப்பாளர்கள் இதனை நேரில் வந்து பார்வையிடவில்லை. எனினும் இதனை ஒரு சாதனையாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.