Sunday 9 August 2009

குரங்குக்குக் கிடைத்த தண்டனை!



ஓர் அடர்ந்த காட்டின் நடுவில் மிகப்பெரிய அரசமரம் ஒன்று இருந்தது. அதில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.
பொழுது விடிவதற்கு முன்பாகவே அவைகள் தங்கள் கூட்டை விட்டு இரை தேடுவதற்காக பறந்து சென்று விடும். தனது குஞ்சுகளுக்கு இரைத் தேடி மாலை நேரத்தில்தான் கூட்டிற்கு வந்து சேரும். அவைகள் கட்டியக் கூட்டில் முட்டைகள், குஞ்சுகள் போன்றவற்றை விட்டுச் சென்று விடுவதால், தாய்-தந்தை இரை தேடிக் கொண்டு திரும்பும் வரை குஞ்சுகள் தனியாகக் கூட்டுக்குள்ளேயே காத்துக் கொண்டிருக்கும்.
அம்மரத்தில் வசித்து வந்த பறவைகளுக்கு சில நாட்களாக பொல்லாத குரங்கு ஒன்று தொல்லைக் கொடுத்து வந்தது. பெற்றோர் இரை தேட வெளியே கிளம்பியதும், அந்தக் குரங்கு அப்பறவைகள் கட்டிய கூடுகளைப் பிரித்து எரிந்து, அதில் இருக்கும் முட்டைகளைக் கீழே போட்டு உடைத்து, குஞ்சுகளைக் கொன்று விடும். இப்படி அக்குரங்கு செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமானது. அந்தக் குரங்கைக் கண்டு மற்ற பறவைகள் அனைத்தும் பயந்து நடுங்கின. குரங்கை எதிர்க்க ஒரு பறவைக்குக் கூட துணிச்சல் வரவில்லை. இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அக்குரங்கு, மரக்கிளையில் ஊஞ்சலாடியபடி, கவலையின்றி தனது வாழ்நாளைக் கழித்தது. மேலும், தனக்கு விதவிதமான உணவுப் பொருள்களைக் கொண்டு வந்து தரும் படியும் பறவைகளை மிரட்டி வந்தது. குரங்கு கூறியபடி பறவைகளும் தங்களது சிறிய அலகுகளால் தானியங்களைக் கொண்டு வந்து தந்தன.
குரங்கு ஒரு நாள், ஒரு பறவையைக் கூப்பிட்டு, பெரிய பை ஒன்றை அதனிடம் கொடுத்து, மாலைக்குள் அந்தப் பை நிறைய தானியங்களைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டது. பாவம் அந்தப் பறவை என்ன செய்யும்? அதனால் பை நிறைய எப்படி தானியம் சேகரிக்க முடியும்; அப்படியே சேகரித்தாலும் அதை எப்படித் தூக்கி வர முடியும்? ஆனால், இதைப் பற்றியெல்லாம் குரங்கு கவலைப் படவில்லை.
பாவம்! அந்தப் பறவை காலையிலேயே தனது கூட்டை விட்டு வெளியே கிளம்பியது. பகல் முழுவதும் அலைந்து திரிந்து மாலைக்குள் எப்படியோ பை நிறைய தானியத்தை சேகரித்துவிட்டது. ஆனால், அந்தப் பையைத் தூக்க அதனால் முடியவில்லை. எனினும், குரங்கு தன்னை ஏதாவது செய்துவிடுமோ என்று பயந்து, தனது சிறிய அலகால் அந்தப் பையை இழுத்துக் கொண்டு வந்து குரங்கிடம் சேர்த்தது.
குரங்கைப் பார்த்து, ""குரங்கு மாமா! இன்று நான் என் குழந்தைகளுக்கு எந்தத் தானியமும் தேடவில்லை. அதனால் இந்தப் பையில் உள்ள தானியத்தில் சிறிது தந்தால், எனது குஞ்சுகளின் பசியைப் போக்குவேன்'' என்று கூறியது.
அதைக் கேட்ட குரங்கு, ""உன் குஞ்சுகளின் பசிக்கு நான் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? இந்தப் பையில் இருந்து நீ எதையும் எடுத்துச் செல்லக் கூடாது'' என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது. இதனால் மிகுந்த வருத்தமடைந்த பறவை, தன் கூட்டை நோக்கிப் பறந்து சென்றது.
மறுநாள், ஒரு கிளியைக் கூப்பிட்டு இதுபோலவே, தானியம் கொண்டு வருமாறு கஷ்டப்படுத்தியது குரங்கு. அந்தக் கிளி காட்டைவிட்டு வெகுதூரத்தில் இருந்த ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கு ஒரு வீட்டில் கிடைத்த சப்பாத்தித் துண்டுகளைக் கொண்டுவந்து தந்தது.
அந்த மரத்தில் வாழும் எல்லாப் பறவைகளுமே அந்தக் குரங்குக்காக ஏதாவது கொண்டு வந்து தரும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டன. இதனால் குரங்கு நிம்மதியாக இருந்த இடத்தில் இருந்து கொண்டு சாப்பிட்டு நிம்மதியாகத் தூங்கியது. குரங்கின் செயலை நினைத்து அனைத்துப் பறவைகளும் மிகவும் எரிச்சலடைந்தன.
ஒரு நாள், குரங்கால் பாதிக்கப்பட்ட கிளி, புறா, மைனா, மரங்கொத்தி போன்ற பறவைகள், பெüர்ணமி நாளன்று ஓர் இடத்தில் கூடி இதுபற்றி ஆலோசித்தன. அதன்படி, இந்த மரத்தை விட்டு நாம் அனைவரும் வேறு இடத்திற்குச் சென்று கூடு கட்டி வாழலாம்; அல்லது அந்தக் குரங்கை இந்த மரத்தை விட்டு விரட்டி விடலாம் என்பது போல பல யோசனைகள் செய்தன. அந்தப் பறவைக் கூட்டத்தில் வயதான பருந்தும் இருந்தது.
அது கூறியது, ""பிள்ளைகளே! நம்மை இப்படி தானியம் கொண்டுவரக் கட்டாயப்படுத்தும் குரங்கை அடிக்க ஒரு வழிதான் உள்ளது'' என்றது.
உடனே ஆந்தை, ""என்ன வழி உள்ளது தாத்தா? உடனே சொல்லுங்களேன்'' என்றது. அதைக் கேட்ட பருந்து,""இந்தக் காட்டில் விசித்திர மரம் ஒன்று உள்ளது. அதைப்பற்றி இதுவரை யாருக்கும் தெரியாது. அந்த மரத்தில் ஏதாவது ஒரு பகுதியை வெட்டினால் அதிலிருந்து ஒரு பொருள் வெளிவரும். அது உடம்பில் பட்டால் ஒட்டிக் கொள்ளும். பிறகு, அதைப் பிரித்து எடுக்கவே முடியாது. அதை எப்படியாவது நீங்கள் எடுத்து வந்து குரங்கின் மீது போட்டுவிட்டால் போதும். ஆனால், ஒரு விஷயத்தில் கவனமாக இருங்கள். அதைக் கைகளில் படாமல் எடுக்க வேண்டும். உடம்பில் சிறிது பட்டாலும் புண்ணாகிவிடும்'' என்றது.
பருந்து கூறியபடி, சில பறவைகள் அந்த மரம் இருக்கும் இடத்திற்குச் சென்று, தங்களது உடம்பில் படாதபடி நீண்ட குச்சி ஒன்றில் அந்த மரத்தில் இருந்து வடிந்த திரவம் போன்ற அந்தப் பொருளை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த குரங்கின் உடம்பில் பல இடங்களில் தடவி விட்டன.
மறுநாள் காலை எழுந்ததும், குரங்கு தனது உடம்பில் ஒட்டி இருந்த அந்தத் திரவத்தை எடுக்க முயன்றது. அது நன்றாக ஒட்டிக் கொண்டதால் பிரித்து எடுக்க முடியவில்லை. உடலில் பல இடங்களில் புண்ணாகிப் போய் அதிலிருந்து ரத்தம் வடியத் துவங்கியது. இதைப் பார்த்து குரங்கு மிகவும் பயந்து போனது. வலியால் அங்கும் இங்கும் தாவி அழுது புரண்டது. இப்படியே சில நாட்கள் கழிந்தன. இப்போதெல்லாம் குரங்கு பறவைகளிடம் தானியங்களைக் கொண்டு வந்து தரும்படி மிரட்டுவதில்லை. மிகுந்த கவலையால் கத்திக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பறவைகள் இரக்கப்பட்டன.
குரங்கு, தனக்கு உதவி செய்யும்படி பறவைகளை வேண்டியது. தான் செய்த தீய செயல்களுக்காக மன்னிப்பும் கேட்டது. இதைக் கேட்ட பறவைகள், எப்படியாவது குரங்கின் துன்பத்தைத் தீர்க்க வேண்டும் என முடிவு செய்தன. அதன்படி ஒரு நாள், பருந்து தாத்தாவைத் தேடி மற்ற பறவைகள் சென்று, ""பருந்துத் தாத்தா! பாவம் குரங்கு. தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தி விட்டது. அதனால், அதன் உடம்பில் ஏற்பட்ட காயத்தைப் போக்க ஏதாவது மருந்து இருக்கிறதா? அப்படி இருந்தால் கூறுங்களேன். பாவம் குரங்கு துன்பப்படுவதை எங்களால் பார்க்க முடியவில்லை'' என்றன.
சிறிது நேரம் பேசாமல் இருந்த பருந்து, ""நீங்கள் இப்படி கூறியதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எந்த மரத்தில் இருந்து அந்தத் திரவத்தை எடுத்தீர்களோ, அதே மரத்தின் இலைகளைப் பறித்து வந்து, சாறு எடுத்து குரங்கின் உடம்பில் உள்ள காயத்தில் தடவுங்கள். இரண்டு நாட்களிலேயே காயம் ஆறி விடும்'' என்றது.
பருந்து கூறியது போலவே, அந்த மரத்தின் இலைகளைப் பறித்து சாறு எடுத்து குரங்கின் காயத்தில் தடவின. குரங்குக்கு சில நாட்களிலேயே காயம் குணமாகிவிட்டது. மேலும், அது எல்லாப் பறவைகளிடமும் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்து கொண்டது. கெட்ட செயல்களுக்கு கண்டிப்பாகத் தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டது. இதனால் மற்ற பறவைகள் அனைத்தும் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்தன.

நன்றி தினமணி! smile.gif

No comments:

Post a Comment