கண்ணியப்பனின் மனைவி வேலம்மா, எலிகளை ஒழிக்க ஒரு பூனையை வளர்க்கலாம் என்று சொன்னாள். அத்துடன் திருடர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க ஒரு நாயை வளர்க்கலாம் என்றும் யோசனைச் சொன்னாள்.

நல்ல யோசனைதான். உடனே செயல்படுத்த வேண்டியது தானே என்று கண்ணியப்பன் கூறினான்.

ஊட்டமாக வளர்ந்திருந்த பூனை மியாவ், மியாவ் என்று கத்திக் கொண்டு வீட்டைச் சுற்றி வந்தது. பயந்து போன எலிகள் கண்ணியப்பனின் வீட்டை விட்டு வெளியேறின. கண்ணியப்பனும், வேலம்மாவும் மகிழ்ந்தனர்.

அப்பாடா எலித் தொல்லைகள் ஒழிந்தது என கண்ணியப்பன் நிம்மதி அடைந்தான்.

ஒரு கட்டத்தில் கண்ணியப்பனின் வீட்டில் எலிகளே இல்லை என்ற நிலை உருவானது. என்றாலும் பூனை இருவு முழுவதும் கத்திக் கொண்டே இருந்தது.

ச்சே... இந்தப் பூனையோட தொல்லை தாங்க முடியவில்லை. கண்ணியப்பனுக்கு இரவுத் தூக்கம் முற்றிலும் கெட்டுப் போனது.

இங்கே பார்... இனிமேல் கத்தினால் உன்னைக் கொன்றுவிடுவேன் ஜாக்கிரதை என்று குச்சியை எடுத்து பூனையை இரண்டு சாத்து சாத்தினான் கண்ணியப்பன்.

இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்த நாய் நடுங்கிப் போனது. அதன் மனதில் ஐயய்யோ.... சத்தம் போட்டால் நம்ம எஜமானருக்கு பிடிக்காது போலிருக்கு. இனிமே நாம வாயை திறக்கக் கூடாது என நினைத்துக் கொண்டது.

அன்றிரவு திருடர்கள் கண்ணியப்பன் வீட்டில் புகுந்து பொருட்களை களவாடி ஒரு மூட்டையில் கட்டிக் கொண்டுச் சென்றனர். இதையெல்லாம் அந்த நாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

உடனே திருடர்கள் ஏம்பா... கபாலி, அது என்ன நாய்டா...? ரொம்ப அமைதியா இருக்கு. எப்படியோப்பா, எல்லா வீட்டுலயும் இதே மாதிரி நாய் இருந்தால் நம்ம வேலை சுலபமா முடிந்து விடும்.

மறு நாள் களவு போயிருப்பதை அறந்த கண்ணியப்பன் அதிர்ச்சி அடைந்தான். இந்த வீட்டில் நாய் இருந்துமா இந்த அநியாயம் நடந்திருக்கு. எங்க அந்த நாய்? ஏய்... வாயை மூடிக் கொண்டு இருந்தாயா? உன்னால் சத்தம் கூட போட முடியவில்லையா? திருடனைப் பார்த்து குரைக்கத் தெரியாத நாய் என்ன நாய்? என தடியை எடுத்து நாயை அடித்து நொறுக்கினான். எங்கேயாவது ஓடித் தொலை. இந்தப் பக்கம் மீண்டும் பார்த்தால் கொன்று விடுவேன் என்று கூறினான்.

ச்சே... என்ன உலகம் இது. கத்தினாலும் அடிக்கிறார்கள், வாயை மூடிக் கொண்டிருந்தாலும் உதைக்கிறார்கள். என்னதான் செய்வது என புலம்பிய படியே நாய் தன் கால் போன போக்கில் சென்றது.

நன்றி தினமணி!