Sunday 19 July 2009

புத்திசாலி ரம்மி !



ஆலந்தூரில் ரம்மி என்றொரு சிறுவன் இருந்தான். அவன் மிகவும் புத்திசாலி; தைரியசாலியும் கூட. ஒரு நாள் அவன் பள்ளி விடுமுறைக்கு பக்கத்து ஊரில் இருக்கும் தன் பாட்டி வீட்டிற்கு செல்ல ஆசைப்பட்டான். அவன் தந்தை அவனை தனியாக பாட்டியின் ஊருக்கு அனுப்பி வைக்க ஆசைப்பட்டார். ஆனால், ரம்மியின் அம்மாவிற்கு அது சிறிதும் பிடிக்கவில்லை. ""என் பிள்ளையைத் தனியே அனுப்பமாட்டேன்,'' என்று கூறி அடம் செய்தாள்.


""என் மகன் தைரியக்காரன். அவன் எந்த எதிர்ப்பையும் சமாளித்துவிடும் திறமை படைத்தவன். வீணாக பயப்படாதே,'' என்று தைரியம் கூறினார் தந்தைமகனுக்கு கட்டுச் சோறு கட்டிக் கொடுத்து பக்கத்தூருக்கு அனுப்பி வைத்தனர். ரம்மியும் வெகு பத்திரமாக தன் பாட்டி வீட்டுக்கு போய் சேர்ந்தான். பாட்டி பேரனை இரண்டு மூன்று நாட்கள் தன் வீட்டில் வைத்திருந்தாள். பிறகு அவனை அவரது பெற்றோரிடம் திருப்பி அனுப்பி வைத்தாள். திரும்பிச் செல்லும் தன் பேரனுக்கு காதில் ஒரு தங்க கடுக்கனைப் போட்டுவிட்டாள். பேரனும் பாட்டியிடம் சொல்லிக் கொண்டு தன் பெற்றோரிடம் புறப்பட்டான். பாதி தூரம் நடந்து வந்ததும் அவனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு சிறிய கிணறு தெரிந்தது. உடனே அந்தக் கிணற்றிலிருந்து எப்படி நீர் இறைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.


அந்த நேரத்தில் அந்த வழியாக ஒரு முரடன் வந்தான். அவன் ஒரு திருடன். அவன் தனியாக வந்த ரம்மியைப் பார்த்தான். அவன் காதில் தங்கக் கடுக்கன் இருப்பதையும் பார்த்தான். உடனே அதை அபகரிக்க முடிவு செய்தான். தன் காதில் இருக்கும் கடுக்கனையே திருடன் விடாமல் பார்ப்பதை ரம்மி கவனித்தான். தன்னை அடித்துப் போட்டுவிட்டோ அல்லது கொன்று விட்டோ தனது காதுக் கடுக்கனை திருடன் திருடிக் கொண்டு போய்விடுவான் என்று ரம்மிக்கு நன்கு புரிந்தது. மறு நிமிடம் ஏதோ யோசித்தான். மிகுந்த பயத்துடன் அழுவது போல அழத் தொடங்கினான். சிறுவன் கிணற்றருகில் நின்றதையும், கிணற்றை எட்டிப் பார்த்ததையும், பின்பு திடீரென அழுவதையும் பார்த்த திருடன் ஒரு நிமிடம் விழித்தான். ""தம்பி ஏன் இப்போது நீ அழுகிறாய்?'' என்று கேட்டான்.


""அண்ணே! என் பாட்டி எனக்கு இந்த ஒரு சவரன் தங்க கடுக்கனையும், ஐந்து சவரன் சங்கிலியையும் போட்டு விட்டார். நான் தண்ணீர் தாகம் எடுத்ததால் இந்த கிணற்றடிக்கு வந்தேன். கிணற்றில் நீர் இருக்கிறதா என எட்டிப் பார்த்தேன். அப்போது என் சங்கிலி கழன்று கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. அதனை எடுக்காமல் வீட்டிற்கு திரும்பினால் என் அப்பா என்னைக் கொன்றே விடுவார்,'' என்று கூறி அழுதான். இதைக் கேட்ட திருடனின் மனம் ஏதோ திட்டம் இட்டது. ஒரு சவரன் கடுக்கனை விட ஐந்து சவரன் சங்கிலி மிகவும் விலையுயர்ந்ததல்லவா? எனவே, அதனை கிணற்றுக்குள் இறங்கி தேடி எடுக்க திருடன் முடிவு செய்தான். ""தம்பி! நீ அழாதே! இதோ கிணற்றுக்குள் இறங்கி உன் சங்கிலியை எடுத்து வருகிறேன்,'' என்று கூறினான்.


மறுநிமிடம் கிணற்றுக்குள் இறங்கினான். இதைக்கண்டதும், சிறுவன் அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்தோடி விட்டான். திருடன் கிணற்றுக்குள் சங்கிலியை தேடோ தேடென தேடிக் கொண்டிருந்தான். அதற்குள் ரம்மி தன் ஊருக்குள் ஓடி வந்துவிட்டான். தன் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் நடந்ததைக் கூறினான். பெற்றோர் அவனது சாமர்த்தியத்தைப் பெரிதும் புகழ்ந்தனர். ஆபத்து நேரத்தில் பயந்து நடுங்கி அழாமல் சாமர்த்தியமாகவும், தைரியமாகவும், செயல்பட்ட ரம்மியை ஊரே புகழ்ந்தது.
குட்டீஸ்... எதிர்பாராமல் நமக்கு ஆபத்து வருவது இயற்கை. ஆனால், அந்த ஆபத்து நேரத்தில் அஞ்சாமல் அதை எதிர்க்கொண்டு சமாளித்து ஜெயிக்க வேண்டும். அது தான் நல்ல திறமை. அதை விட்டு விட்டு பயந்து நடுங்கி அழக்கூடாது. புரிகிறதா?

நன்றி தினமலர்!
smile.gif

2 comments:

  1. வலைப்பூவை நன்கு கோர்த்திருக்கிறீர்கள். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete