Thursday 27 March 2014

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு தடை

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

அத்துடன், சீனிவாசனுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய இடைக்கால தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஐ.பி.எல். 6ஆவது போட்டியின் போது சூதாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை நீதிபதி முத்கல் கமிட்டி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது சூதாட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பல முறைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதனால் நேர்மையான விசாரணை நடைபெற கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் கண்டிப்புடன் கூறியிருந்தது. அத்துடன் சீனிவாசன் விலகாவிட்டால் அவர் பதவி விலக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.

ஆனால் சீனிவாசனோ, என்னை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து யாரும் நிர்பந்தப்படுத்தி வெளியேற்றிவிட முடியாது என்று சவால்விட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது முத்கல் கமிட்டி பரிந்துரைப்படி தவறிழைத்தோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தயராக இருக்கிறோம் என்றும் சீனிவாசன், தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருப்பார் என்றும் உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. 
அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், கிரிக்கெட்டின் நலன் கருத்தி கடினமான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, முத்கல் கமிட்டியிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் சில அதிரடியான யோசனைகளைத் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் பதிலைக் கோரியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரைகள்:

- இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக சுனில் கவாஸ்கர் அல்லது மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவரை நியமித்தல்.

- என்.சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையோர் எவருமே இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெறக் கூடாது.

- ஐ.பி.எல். சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மறு உத்தரவு வரும் வரை நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடக் கூடாது.

இந்த பரிந்துரைகளுக்கான பதிலை கிரிக்கெட் வாரியம் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

கிரிக்கெட் வாரியத்தின் நாளைய பதிலைத் தொடர்ந்து ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவுள்ளது. 

No comments:

Post a Comment